அறிவியல் புனைகதைகள்!
Share
தமிழில் அறிவியல் புனைகதைகள் என்றாலே பெரும்பாலும் அறிவியல் சார்ந்த கதைகளே அதிகம் வெளிவந்துள்ளன. அறிவியல் சூழ்நிலையை கதைகளில் இணைத்துக் கொடுத்த எழுத்தாளர்களில் சுஜாதா முக்கியமானவர். அவரது கதைகளில் அறிவியல் நுட்பங்கள், தொழில்நுட்ப தாக்கங்கள் மற்றும் கற்பனைச் சுதந்திரம் இணைந்து அமைந்திருந்தன. ‘ஜீனோ’, ‘மீண்டும் ஜீனோ’ போன்ற கதைகளில் எதிர்கால வாழ்க்கையின் பரிமாணங்களை அழுத்தமாக வெளிப்படுத்தியிருந்தார். அவரது கதைகள் அறிவியலை மட்டுமல்லாமல், மனித உணர்வுகளையும் நுணுக்கமாகச் சொல்லும் தன்மையைக் கொண்டிருந்தன.
அறிவியல் கதைகள் எழுதிய எழுத்தாளர்களில் இரா. முருகனும் குறிப்பிடத்தக்கவர். கணினித் துறையில் அவருக்கு இருந்த அனுபவம் அவரது கதைகளில் பிரதிபலித்தது. ‘சில்லு’, ‘போகம் தவிர்’ போன்ற கதைகள் அறிவியல் தொழில்நுட்பங்களுடன் மனித உறவுகளைப் பதிவு செய்தன. ஜெயமோகன் அறிவியலை பாரம்பரிய அறிவுடன் இணைத்து புதிய கோணத்தில் கதைகளை உருவாக்கினார். அவரது ‘உற்று நோக்கும் பறவை’ போன்ற கதைகள் அறிவியல் தத்துவங்களை பேசும் விதமாக அமைந்திருந்தன.
அறிவியல் கதைகள் பெரும்பாலும் தொழில்நுட்ப அடிப்படையிலேயே எழுதப்பட்ட காலத்தில், இரா. முருகன் மற்றும் ஜெயமோகன் மனித மனோதத்துவத்தையும் அறிவியலுடனே இணைத்துத் தந்தனர். நளினி சாஸ்திரியின் ‘ஆத்மாவுக்கு ஆபத்து’ போன்ற கதைகள் சுஜாதாவால் பாராட்டப்பட்டவை. அதேபோல், தமிழ்மகனின் கதைகளும் நினைவுகூரத்தக்கவை.
தமிழில் அறிவியல் கதைகள் பெரும்பாலும் சிறுகதைகளாகவே இருந்தன. 1000 சொற்களுக்குள் ஒரு கதையை வடிவமைத்து, அறிவியல் கோட்பாடுகளையும் திடீர் திருப்பங்களையும் இணைப்பது சாதாரணமாகக் காணப்பட்டது. ஆனால், முழுநீள அறிவியல் நாவல்கள் தமிழில் குறைவாகவே வந்துள்ளன.
அறிவியல் புனைகதைகளுக்கு முன்பே தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதப்பட்டன. பெ.நா. அப்புஸ்வாமி அறிவியல் கட்டுரைகளின் முன்னோடியானார். அறிவியல் சார்ந்த சொற்கள் இல்லாத சூழலில் புதிய சொற்கள் உருவாக்கும் சவால்களை அவர் எதிர்கொண்டார். சுஜாதா தனது காலத்தில் கணினி தொடர்பான அறிவியலைப் பரப்புவதிலும், புதிய தமிழ் கலைச்சொற்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றினார். இன்று என். ராமதுரை போன்றோர் அறிவியலை எளிமையாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
- சுதாகர் கஸ்தூரி, ‘6174’, ‘டர்மரின் 384’ ஆகிய அறிவியல் புனைகதை நாவல்களின் ஆசிரியர்